Search This Blog

Thursday, September 22, 2016

சிறுகதைகள் _ இன்று புதிதாய் பிறந்தேன்! - நித்யா பாலாஜி

இன்று புதிதாய் பிறந்தேன்! 
-நித்யா பாலாஜி

விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல மகன் கதிருடன் வந்திருந்தவரைப் பார்த்தவுடன்எரிச்சலாக இருந்தது.'இவர் இங்க எப்படி...என்ற கேள்விமனதில் தோன்றிய நிமிடம், ''வாங்க சம்பந்திபிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா...''எனநலம் விசாரித்தார்.
''
ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருந்தது,'' என்று முகம் பாராமல் பதிலளித்துகதிரிடம் திரும்பி, ''ஏன் பானு வரல?'' என்று நான் கேட்ட தொனியில்அதிலிருந்த கடுமையை உணர்ந்தவன்சற்றே மென்மையாய், ''அவளுக்கும் வரணும்ன்னு தான்ப்பா ஆசை;ஆனாஇன்னைக்குஅவளுக்கு ஆபீசில முக்கியமான மீட்டிங். நாம வீட்டுக்கு போறதுக்குள்ள வந்துடுவா,'' என்றான்.
'
ஊரில இருந்து வரும் மாமனாரை அழைக்கக்கூட வர முடியாமஅப்படி என்ன மீட்டிங்...பானு மேல் தோன்றிய கோபமும்,பிரயாண அசதியும்என் எரிச்சலை பன் மடங்காக்கியது.
''
எவ்ளோ நேரம் ஆகும் வீட்டிற்கு போக?''
பானுவின் அப்பா பதில் சொன்னார்... ''குறைஞ்சது முக்கால் மணி நேரம் ஆகும்,'' என்றார்.
''
களைப்பா இருந்தாகொஞ்ச நேரம் தூங்குங்கப்பா,'' என்றான் கதிர்.
தூங்குவது போல கண்களை மூடினாலாவதுபானுவின் அப்பாவிடம் பேசுவதை தவிர்க்கலாம் என்றெண்ணி கண்களை மூடினேன்.
சிறிது நேர பயணத்திற்கு பின், ''கதிர்... நான் இங்கேயே இறங்கிக்கிறேன்அப்புறம் வந்து அப்பாவ பாக்கறேன்,'' என்று கூறி இறங்கிச் சென்றார் பானுவின் அப்பா.
''
இந்த ஆள் எப்ப இங்க வந்தான்இப்போ எங்க போறான் அமெரிக்காவையே கரைச்சுக் குடிச்ச மாதிரி,'' கோபமாய்நான் கேட்க, ''அப்பா... கொஞ்சம் அமைதியா இருங்கஏன் மாமாவ கடிஞ்சு பேசறீங்க...'' என்றான் கதிர்.
அவன் அவருக்காக பரிந்து பேசியது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
''
என்னடாஒரேடியா பொண்டாட்டி வீட்டோட ஐக்கியம் ஆகிட்ட போல,'' நக்கலாய் ஆரம்பித்த என் குரல்வீடு வந்து விட்டதை அறிந்து நின்றது. கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த பானு, ''வாங்க மாமா... எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டு வரவேற்றாள்.
''
இப்போ நல்லா பேசுவிமான நிலையத்துக்கு வர்றதுக்கு என்ன?''
''
ஆபீசில முக்கியமான மீட்டிங்அதான் அப்பாவஅவர் கூட அனுப்பினேன்.''
''
ஆமாம்நீ ரொம்ப பிஸின்னு கதிர் சொன்னான். நீ தான் வரலசரி விடுஉன் அப்பாவஏன்என் பையன் கூட அனுப்புற... அவர பாத்ததும்உடனேநான்அடுத்த பிளைட் பிடிச்சுஇந்தியாவுக்கே போய்டணும்ன்னு அப்பாவும்பொண்ணும் திட்டம் போட்டு வச்சீங்களா...'' 
நான் கோபமாக கத்துவதை கேட்டுஉள்ளறையில் என் உடைமைகளை வைத்துக் கொண்டிருந்த கதிர் ஓடி வந்தான்.
''
பானு... அப்பாவுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாரொம்ப களைப்பா இருக்கார்,'' என்றுஅவளை உள்ளே அனுப்பி, ''அப்பா என்ன இது... ஏன் இப்படி பேசறீங்கஅவளே கடந்த, 10 நாளா ஆபீசில ஓய்வு இல்லாம வேலை பாத்துட்டு இருக்கா. நீங்க வர்றீங்கன்னு அத்தனை வேலைகளையும் தள்ளி வச்சுட்டு ஓடி வந்துருக்காஅவளை போய் வந்ததும்வராததுமா திட்டறீங்களே...''
''
ஆமாம்நான் பொல்லாதவன்இந்த பட்டம் தரத்தான்இந்தியாவில இருந்து என்னை வர சொன்னியா?'' என்று கேட்டுமீண்டும் என் குரல் உயர்ந்த சமயம்தட்டில் சூடான உப்புமாவுடன் வந்தாள் பானு.
அதன் மணத்தில் அவ்வளவு நேரம் மறந்து இருந்த பசி தலை தூக்கியது. இருந்தாலும்உடனே உண்ணகவுரவம் இடம் தரவில்லை.
''
ம்ம்... அவ்ளோ தூரத்தில இருந்து வந்தவனுக்குரொம்ப கஷ்டப்பட்டு உப்புமா செஞ்சு வச்சு இருக்க போல...''என்றேன்.
பார்வையாலேயேஅவளை உள்ளே போக சொன்ன கதிர், ''அப்பா... சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க,'' என்று சொல்லி, 'டிவி'யை பார்க்கத் துவங்கினான்.
உடம்பிற்கு ஓய்வு தேவைப்பட்டாலும்மன உளைச்சலில் தூக்கம் வரவில்லை. பானுவின் அப்பாவும்நானும்ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த காரணத்தால்எங்கள் இரு குடும்பங்களும்ஒருவரை ஒருவர் அறிந்தே இருந்தது. கதிர்,பானுவை மணக்க விருப்பம் தெரிவிக்கஎனக்கு அதில் உடன்பாடு இல்லை. இறுதியில் கதிரின் பிடிவாதம் வென்றது. 
அதே சமயத்தில்பானுவின் அப்பாவிற்கு பதவி உயர்வு வந்துநான் அவருக்கு கீழ் வேலைப் பார்க்கும்படி நேர்ந்தது. அவர் அதிகாரியானதுபொறாமையையும்இனம் புரியாத வெறுப்பையும் என்னுள் வளர்த்தது. அத்துடன்எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கு என் முன் கோபமும்சக ஊழியர்களிடம் நட்பற்ற தன்மையும் தான் காரணம் எனசக ஊழியர் ஒருவர் என் காதுப்பட பேசவேகோபத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.
பழைய நினைவுகளால் தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த என்னிடம்காபி கொடுத்தான் கதிர்.
சமையல் அறையில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் பானு.
''
கதிர்... இப்படி உட்காரு,'' என்றேன். அவன் அமர்ந்ததும், ''உன் மாமனார் இங்க எதுக்கு வந்துருக்கார்... அவர் வந்ததை பத்தி என்கிட்டே ஏன் சொல்லல?'' என்று கேட்டேன்.
''
அப்பா... அமைதியா இருங்க. எதுக்கு இவ்ளோ கோபம்மாமா நம்ம வீட்டுக்கு வரலஅவர் பையன் வீட்டுக்கு வந்து இருக்கார்.''
''
அவன் டெக்ஸாசில இருக்கான்பொய் சொல்லாதே,'' என்றேன்.
லேசாக சிரித்தவன், ''அப்பாஅவர் பையன் இங்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. அவன்அவன் மனைவிநான் எல்லாரும் ஒரே கம்பெனியில் தான் வேலை பாக்கறோம். இதே அபார்ட்மென்ட் கேம்பசில தான் அவனும் இருக்கான்,'' என்றான் கதிர்.
''
அப்படின்னாநீ தான் உன் கம்பெனியில அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தியா... பொண்டாட்டி குடும்பத்துக்கு தலையாட்டி பொம்மை ஆகிட்டேன்னு சொல்லு,'' என்றேன்.
''
ஏன்ப்பா இப்படி இருக்கீங்க... மாறவே மாட்டீங்களாஉங்களோட இந்த குணத்தால அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா...'' என்றான் சிறு எரிச்சலுடன்!
''
ஆமான்டாநான் கொடுமைக்காரன்உன் அம்மாவ திட்டியே சாகடிச்சிட்டேன். போதுமா...'' என்று கோபத்துடன் கூறிஅறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டேன்.
''
அப்பாஎன்ன இது சின்னபுள்ள மாதிரி... கதவை திறங்க. ப்ளீஸ்ப்பா... நான் பேசினது தப்புத்தான் மன்னிச்சுடுங்க. வெளில வாங்க,'' என்று கெஞ்சினான் கதிர்.
அவன் மன்னிப்பு கேட்டது சந்தோஷமாக இருந்தாலும்கதவைத் திறக்கவில்லை. அப்படியே படுக்கையில் படுத்தவன்என்னை மறந்து தூங்கி விட்டேன்.
எழுந்தபோதுபானுவின் குரல் கேட்டது, ''என்னங்க இது... மாமாவிற்கு பிடிச்சதை எல்லாம் சமைக்க சொல்லிட்டுஇப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டுஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கீங்கபோய்அவரை சமாதானப்படுத்தி சாப்பிட அழைச்சுகிட்டு வாங்க,'' என்றாள். 
என் அறை நோக்கி கதிர் நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. ''அப்பா... ப்ளீஸ்ப்பா கதவைத் திறங்க...'' என்று கெஞ்சியபடி கதவைத் தட்டினான் கதிர்.
பசி வயிற்றைக் கிள்ளியதால்ரொம்பவும் முரண்டு பிடிக்காமல் கதவை திறந்தேன். உணவின் சுவையில்என்னை மறந்து,வழக்கத்தை விட சிறிது அதிகம் உண்டாலும்மனம் திறந்து பாராட்டவில்லை.
அதன் பின் வந்த நாட்களில்ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுத்துஎன்னுடன் நேரத்தை செலவிட்டனர். பல இடங்கள் சுற்றியது புது அனுபவமாய் இருந்தாலும்ஏதோ ஒப்புக்குஅவர்களுடன் சென்று வருவது போல காட்டிக் கொண்டேன்.
அன்று என் பிறந்த நாள் வந்தது. சட்டை பரிசளித்துஎன்னிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கினர். எனக்கு அந்த சட்டை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனாலும்குளித்த பின்வேண்டுமென்றே வேறு சட்டை அணிந்தேன்.
''
அப்பா... நாங்க வாங்கி கொடுத்த ஷர்ட்ட போடலயா?'' என்று கேட்ட கதிரின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
''
நீ வாங்கிக் கொடுத்தேங்கறதுக்காக போட்டுக்க முடியாதுஎனக்கும் பிடிக்கணும்,'' பட்டென்று நான் சொன்ன பதிலில்கதிரின் முகம் சுருங்கி விட்டது.
மாலை அலுவலகம் முடிந்து வந்தவன், ''அப்பாநாளைக்கு பானுவின் அண்ணனுக்கு முதல் திருமண நாள். வீட்டுல விருந்து வச்சு இருக்காங்க. உங்கள கூப்பிடஅத்தையும்மாமாவும் வருவாங்க,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதேஅவனுடைய மாமனாரும்மாமியாரும் வந்தனர்.
முகம் திருப்பி அமர்ந்திருந்த என்னிடம்அவர்கள் தணிந்து பேசினர்.
அவர்கள் சென்ற பின், ''கதிர்... நான் அவங்க வீட்டு விருந்துக்கு வரல,'' என்றேன்.
பானுவும்கதிரும் என்னை கட்டாயப்படுத்துவர் என்றுஎண்ணினேன். ஆனால்அவர்கள், 'உங்கள் இஷ்டம்என்று முடித்துக் கொண்டது ஏமாற்றமாய் இருந்தது.
மறுநாள் இருவரும்அலுவலகம் கிளம்பியவுடன்வீட்டின் அருகில் இருந்த பெரிய கடையில்எதையாவது வாங்கும் சாக்கில்,நேரத்தை செலவிடலாம் என நினைத்து அங்கு சென்றேன்.
முதன்முறைஅக்கடைக்கு சென்றிருந்த போதுஅங்கு பணியாற்றிய இந்திய இளைஞன் ஒருவன் அறிமுகமாகியிருந்தான். அவன் பெயர் சுந்தர். எப்போது அக்கடைக்கு சென்றாலும்நட்புடன் சிரித்துஓரிரு வார்த்தைகள் பேசாமல்அவன் சென்றது இல்லை.
சில பொருட்களை எடுத்து பில் போட கொடுத்தபோது, ''ஹவ் ஆர் யு அங்கிள்?'' என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
மலர்ந்த முகத்துடன் சுந்தர் நின்றிருந்தான். ''ம்... நல்லா இருக்கேன்நீ எப்படி இருக்கே?'' என்ற என் கேள்விக்குதானும் நலமாய் இருப்பதாய் சொன்னவன், ''அங்கிள்... இந்த சட்டையில நீங்க ரொம்ப இளமையா தெரியுறீங்க... வெரி நைஸ் செலக்ஷன்,'' என்ற போது தான்நான் அணிந்திருந்த சட்டையை பார்த்தேன். அது கதிரும்பானுவும் பிறந்த நாள் பரிசாய் கொடுத்தது.
நான் இளமையாய்பார்க்க நன்றாக இருப்பதாய் சுந்தர் கூறியதும்மனதிற்குள்உற்சாகம் தோன்றியது. நன்றி கூறிஅவனிடம் விடை பெற்று வெளியே வந்த எனக்குமனம் அமைதியாய் இருப்பதை போன்று தோன்றியது. ஒருவர்நம்மை புகழும் போது,மனம் இவ்வளவு சந்தோஷப்பட முடியுமா என்பதைஇதுவரைநான் உணர்ந்ததில்லை.
மாலையில் வேலை முடிந்து அலுப்புடன்பானுவும்கதிரும் வீட்டிற்குள் வரஎனக்கு ஏனோ அவர்களை கண்டவுடன் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. இதுவரைஅவர்கள் இருவரும் எனக்காக செய்த எதையும்நான் பாராட்டியது இல்லை. அவர்கள் எனக்கு செய்வதுஅவர்கள் கடமை என்றே நினைத்திருந்தேன். யாரோ ஒருவன்நான் அணிந்த உடையினால் இளமையாய் தெரிவதாய் சொன்னதற்கே என் மனம் இவ்வளவு சந்தோஷப்படுகிறதே... இவர்கள் என்னை மனம் கோணாமல் வைத்துக் கொள்ள என்ன பாடுபடுகின்றனர்... ஆனாலும் நான்இவர்கள் செய்வதை ஒரு நாளும் மனநிறைவோடு ஏற்றுக் கொண்டது இல்லையே... எனக்கே என் மன நிலையின் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் பானுவின் அண்ணன் வீட்டிற்கு புறப்பட்டு செல்லஇரவு உணவைஅருகில் உள்ள இந்தியன் உணவகத்தில் பார்த்துக் கொள்வதாய் சொல்லி விட்டேன். 
இரவு - இந்தியன் உணவகத்தில்என் அருகே இருந்த மேஜையில்என் வயதொத்த தம்பதி வந்து அமர்ந்தனர். சிறிது நேரத்தில்,அந்த அம்மா தன் கணவர் மேல் பாயத் துவங்கினார்.
''
உண்மைய சொல்லுங்க... இன்னைக்கு உங்க மருமக செய்திருந்த மதிய சமையல் வாயில வைக்கற மாதிரியா இருந்துச்சு... ஆனாநீங்க என்னடானா அப்படி புகழ்ந்து தள்ளறீங்க... அவளைஒரு வார்த்தை சொன்னாவரிஞ்சு கட்டி சப்போர்ட் செய்றீங்க,''என்று பொரிந்து தள்ளினாள்.
''
உன் பேச்சை மதிக்காமஉன் பையன் கல்யாணம் செய்துக்கிட்டான்னுஅந்த கோபத்த அந்தப் பொண்ணுகிட்ட காட்ட நினைக்கிறே... அவ டில்லி பொண்ணுஅதுக்கு பராத்தாரொட்டிசப்பாத்திசப்ஜிதான் செய்ய வரும். ஆனாஅந்தப் பொண்ணு நம்மளை சந்தோஷப்படுத்த எண்ணிநம்ம ஊர் சமையல செய்யுது. அதுல சமயத்துல புளிப்புஉப்புகாரம் தூக்கலாவோ இல்ல குறைஞ்சோ போய்டுது. இத பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணுகிட்ட பிரச்னை செய்றே... இன்னைக்கு நீ கோவிச்சுக்கிட்டு மதியம் சாப்பிடாம போய் படுத்துட்டஅந்தப் பொண்ணு எப்படி அழுதா தெரியுமா?''
''
எல்லாம் நடிப்பு.''
''
அப்படி பேசாத... இவ்ளோ செலவு செய்து நம்மள வரவழைச்சுஉன்கிட்ட பேச்சு வாங்கணும்ன்னுஅவளுக்கு தலையெழுத்தா... நாம இங்க வந்து இருக்கறதுநம்ம பேரப் பிள்ளைக மகன்மருமக கூட கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்க. ஆனாநீ என்னமோ நாம வந்ததே சாப்பிடத்தான் என்பது போல நடந்துக்கற. நாம இன்னும் எவ்வளவு காலம் வாழ்ந்துட போறோம்... நம் வாழ்க்கையில முக்கால்வாசி நாட்கள் முடிஞ்சு போச்சு. இனிமேலாவதுஇருக்கறவரை நாமும் சந்தோஷமாய் இருப்போம்;மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முயற்சிப்போம். தயவு செய்து உன்னை மாத்திக்கப் பாரு,''என்றார்.
சுந்தரின் பாராட்டு வார்த்தைகளால் அமைதியாக இருந்த என் மனம்அவரின் பேச்சில் இருந்த கருத்தை உள்வாங்கியது. காபி மட்டும் குடித்து விட்டு கிளம்பினேன். 'இருக்கற வரை நாமும் சந்தோஷமாய் இருந்துமற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முயற்சிக்கணும்...என்று அவர் கூறியது என் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது. 
வீட்டில் பானுவும்கதிரும் எனக்காக காத்திருப்பதை கண்டவுடன்மனம் சட்டென்று உருகி விட்டது.
''
ஏன் ரெண்டு பேரும் உடனே வந்துட்டீங்க... இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாமே...'' என்றேன்.
பேசுவது நான் தானா என்பது போலஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
''
இல்லநாங்க சாப்பிட்டோம்நீங்க சாப்பிட்டீங்களான்னு தெரியல. அதான் சீக்கிரம் வந்து இட்லி செய்து வச்சுருக்கேன்,''பானுவின் குரலில்நான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற பயம் தெரிந்தது.
''
எடுத்து வைம்மாசாப்டறேன்,'' தன்மையாய் வெளிப்பட்ட என் குரலை கேட்டுஇருவருமே ஒரு நிமிடம் அசந்து நின்றனர்.
பஞ்சு போன்ற இட்லியும்காரம்புளிப்புஉப்பு எல்லாம் சரியான விகிதத்தில் இருந்த தக்காளி சட்னியும்அருமையாய் இருந்தது. அதை வாய்விட்டு சொல்லியபோது, ''அப்பாநிஜமா சொல்றீங்களா... அருமையா இருக்கா?'' கதிரின் குரலில் சந்தோஷம்.
''
நன்றி மாமா,'' என்றபோதுபானுவின் முகம் ஜொலித்தது.
இவ்வளவு காலம் எல்லாரையும்தேவையற்று புண்படுத்திநான் செய்தவைகளை நினைத்துமுதன் முதலாக என் மனம் வருந்தியது. மீதம் இருக்கும் நாட்களிலாவதுயாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன்கண்களை மூட,தூக்கம் எந்த இடையூறும் இன்றி வந்து கண்களை தழுவியது.
காலை எழுந்தவுடன்என் சம்பந்தியின்கைபேசிக்கு அழைத்தேன். எடுத்தவரிடம் காலை வணக்கம் சொல்லி, ''என்னுடன் நடைபயிற்சிக்கு வர முடியுமா?'' என்று கேட்டேன். ''வருகிறேன்...'' என்று தயக்கம் இன்றிஅவர் சொன்னாலும்அவரின் குரலில் இருந்த ஆச்சரியத்தை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.
கதவை திறந்து வெளியே படிகளில் இறங்கிய என் முகத்தில்குளிர்ச்சியாய் மோதிய தென்றல்இன்று புதிதாய் நான் பிறந்ததை எனக்கு உணர்த்தியது.
நித்யா பாலாஜி

சிறுகதை _ மனச்சவரம்! - எம்.டி. கரண்

மனச்சவரம்!
-எம்.டி. கரண்

சூட்கேசிலிருந்த மொத்த துணிகளையும் எடுத்து வெளியே கொட்டித் தேடினேன். குளியல் சோப்புசீப்புகண்ணாடிபவுடர்ன்னு எல்லாமே இருக்கு! ஷேவிங் ரேசரை மட்டும் காணோம். அப்பறம் தான் எடுத்து வரவில்லை என்பது ஞாபகம் வந்தது.
மனைவி ஜோதி படிச்சுப் படிச்சு சொன்னா... 'கேம்ப்போறதுன்னாகொஞ்சம் முன்னாடியே எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கங்க. கடைசி நேரத்துலஏதாவது ஒண்ணு மறந்துரும்அப்புறம்போற எடத்துல சிரமப்படணும்'ன்னு! நான் தான் கேட்கலை. இப்பஷேவிங் ரேசரை மறந்துட்டு வந்து முழிக்கறேன்.
அந்த கிராமத்திலிருக்கும் எங்கள் வங்கியின் கிளைக்குஆடிட் பணி நிமித்தமாய், 'கேம்ப்வந்த நான்வங்கி அலுவலகத்தின் மேல் மாடியிலிருக்கும் தங்கும் அறையில் தங்கினேன்.
'
இப்ப என்ன செய்யறது... சரி... நாலஞ்சு நாள்தானே அப்படியே ஷேவிங் செய்யாமலேயே இருந்திட வேண்டியது தான்...என,முடிவு செய்தபடி தாடையை தடவினேன். ரோம முட்கள்என் உள்ளங்கையைப் பதம் பார்த்தது. 
'
ம்ஹூம்... இப்பவே ஏகமாய் வளந்து கெடக்குஇன்னும் நாலஞ்சு நாள்ன்னா ரொம்ப அதிகமாயிடும். ஒரு ஆடிட் ஆபீசர் தாடியோட இருந்தா அவ்வளவு நல்லாயிருக்காது. இங்கேயே ஏதாவதொரு சலூன் கடைல போய் ஷேவிங் செய்துக்க வேண்டியது தான்...என்று நினைத்தபடியேசட்டையை மாட்டி அறையைப் பூட்டிபடியிறங்கினேன்.
பொதுவாகவேஎனக்கு சிட்டியில் உள்ள சலூன்களில் சவரம் செய்வது என்றால் அலர்ஜி. அதற்குபல காரணங்கள் உண்டு. பீடி மற்றும் சிகரெட் நாற்றம்டெட்டால் வாடைஅங்கு கூடியிருக்கும் வேலை வெட்டியில்லாதவர்களின் அரசியல் மற்றும் சினிமா சம்பந்தமான அநாகரிக வாதங்கள்எல்லாவற்றிற்கும் மேலாகஅரைகுறை ஆடை அழகிகளின் காலண்டர்கள். இதுபோன்ற ஒவ்வாத சமாசாரங்களிலிருந்து தப்பிக்கவே, 'ஹேர்கட்செய்வதற்கு மால்களில் உள்ள உயர்ரக ஆண்கள் அழகு நிலையத்திற்கு செல்வேன்.
'
சிட்டியில இருக்கிற சலூன்களே சகிக்காதுஇதுலஇந்தக் கிராமத்து சலூன் எப்படியிருக்குமோ...என எண்ணியபடிசலூன் கடையைத் தேடி மூன்று தெருக்கள் சுற்றி விட்டேன். ஒரு கடையும் இல்ல.
'
என்ன இது... இந்தக் கிராமத்துல யாருமே கட்டிங்ஷேவிங் செய்யறதில்லயா... பேன்சி ஸ்டோர் இருந்தாலாவதுஒரு ரேசர் வாங்கலாம். அதுவும் கூட இல்ல...என்று நினைத்தபடியே நடந்தேன். எதிரே வந்த கோவணக்காரரிடம், ''அய்யா... இங்க சலூன் கடை எங்க இருக்கு?'' எனவிசாரித்தேன்.
நான் கேட்டது அவருக்குப் புரியவில்லையோ என்னவோசில நிமிடங்கள் யோசித்துபின், ''பலூன் விக்கற கடையையா கேட்கறீங்க?'' என்று கேட்டார்.
''
சலூன் கடை... ஷேவிங் செய்யணும்,'' என்றுஎன் தாடையைத் தேய்த்துக் காட்டினேன்.
''
ஓ... சவரக் கடையா... இப்படியே நேராப் போயிஅப்படியே பீச்சாங்கைப் பக்கம் திரும்பினாமூணாவதா இருக்கும் ராசய்யன் கடை,'' என்றார் திரும்பி நடந்தவாறே!
அந்த கோவணக்காரரின் கறுத்த மேனியில்துளிர்த்த வியர்வைத் துளிகள் கொடுத்த நறுமணம்என் நாசியை உறுத்த,அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
எப்படியோ ஒரு வழியாய்ராசய்யன் சலூன் கடையை அடைந்ததும்பலத்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.
சலூன் கடை வாசலில் ஒரு கரும்பலகையில்இன்றைய செய்திகள் என்று குறிப்பிடப்பட்டுஅதன் கீழே அன்றைய முக்கிய செய்திகள் மற்றும் நாட்டு நடப்பு குறித்த சிறப்புத் தகவல்கள் எழுதப்பட்டிருந்தன.
ஆடம்பர அலங்காரங்கள் இல்லாத பழைய ஓட்டுக் கட்டடத்தில்பத்துக்குப் பத்து என்ற அளவில் அமைந்திருந்தது அந்த சலூன் கடை. உள்ளே மிதமான ஊதுபத்தி மணமும்லேசான சந்தன வாசனையும் ஒரு பூஜை அறைக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தின.
தயக்கமாய் உள்ளே நுழைந்த என்னை, ''வாங்க சார்... வணக்கம்,'' என்று இயல்பான புன்னகையுடன் வரவேற்ற அந்த இளைஞன்,கதர் வேட்டிகதர் சட்டை அணிந்துசந்தனப் பொட்டுடன், 'பளிச்'சென்றிருந்தான். நாகரிகம் அவனை எள்ளளவும் சிதைக்கவில்லை. அநேகமாய்அவன் தான் ராசய்யனாய் இருக்கக்கூடும் என்று யூகித்த நான், ''தம்பி... உன் பேரு தானே ராசய்யன்?'' என்று கேட்டேன்.
மெலிதாய் முறுவலித்தவன், ''இல்லே சார்... என் பேரு குமரன்,'' எனச் சொல்லியவாறே இருக்கையைத் தட்டி, ''உட்காருங்க சார்,''என்றான்.
உட்கார்ந்தபடியே, ''அப்ப ராசய்யன்ங்கறது...'' என்றேன்.
''
என் உயிர் நண்பன்கார்கில் சண்டையில உயிரிழந்த நம் ராணுவ வீரர்களில் ஒருத்தன் தான் ராசய்யன். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன்நாட்டுக்காக தன் உயிரைத் தந்துதான் பிறந்துவளர்ந்த இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவன். அவனோட ஞாபகமா தான் இக்கடைக்குஅவன் பேரை வெச்சிருக்கேன்.
''
நியாயப்படி பாத்தாஅவன் வீடு இருக்கற தெருவுக்கே அவன் பேரை வைக்கணும்அது என்னால முடியல. அதான்என் கடைக்கு வெச்சிட்டேன்,'' என்றவன், ''சாரு வெளியூரா?'' மிக நேர்த்தியாக முகத்திற்கு ஷேவிங் கிரீம் தடவியபடியே கேட்டான்.
''
ஆமாம்... இங்க, 'பேங்க் ஆடிட்'டுக்கு வந்திருக்கேன்,'' என்றேன்.
''
அதனால தான்உங்களுக்கு ராசய்யனைப் பற்றித் தெரியல. இந்தக் கிராமத்துக்காரங்க எல்லாருக்கும் தெரியும்,'' என்றான்.
''
ஓ... அப்படியா,'' என்றவாறேஎன் பார்வையை சுவர்களின் மீது திருப்பினேன்.
புராணஇதிகாசங்களில் வரும் நன்னெறிகளை போதிக்கக்கூடிய காட்சிகள் ஓவியங்களாய் அங்கு தீட்டப்பட்டிருக்க, 'சலூனில் இப்படிப்பட்ட ஓவியங்களா...என நினைத்துவியப்பில் ஆழ்ந்தேன்.
மேலும்அங்கிருந்த சிறிய மேஜை மேல், 'சிகரங்களைத் தொடுவோம்வெற்றியின் வாசல் முன்னேற்றச் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களே ஏணிப்படிகள்எனதன்னம்பிக்கை ஊட்டக்கூடியசுய முன்னேற்றக் கருத்துகளை கூறும் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும்என் கண்களையே நம்ப முடியவில்லை.
அங்கிருந்து பார்வையை திருப்பிய நான், 'இங்கே புகைபிடிக்கக் கூடாது!என்று எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து,மேலும் ஆச்சரியத்திற்குள்ளானேன்.
''
ஓ... இங்க புகை பிடிக்கவும் தடையா,'' என புன்சிரிப்புடன் கேட்டேன்.
''
ஆமாம் சார்... புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவங்களும்குடிப்பழக்கம் இருக்குறவங்களும் இந்த கடைக்கு வர அனுமதி இல்ல. அது மட்டுமல்லஇங்க அவங்களுக்கு கட்டிங்ஷேவிங் எதுவுமே செய்ய மாட்டேன்,'' என்றான்.
''
இதென்னப்பா ரொம்ப அநியாயமா இருக்கு... இப்படியொரு கண்டிஷனப் போட்டாஆட்கள் வர்றது குறைஞ்சுஅதனாலஉனக்கு வருமானம் குறையுமே...''
''
பரவாயில்ல சார்... வருமானம் தானே குறையும்தன்மானம் குறையாதில்ல...''
எல்லா விஷயங்களிலுமேரொம்ப வித்தியாசமாக இருந்த அந்த இளைஞனிடம், ''அது சரி... கடைக்குள்ளார ஸ்க்ரீன் போட்டு மறைச்சு வெச்சிருக்கியேஅது என்ன உன் ரெஸ்ட் ரூமா?'' என்று கேட்டேன்.
''
இல்ல சார்... கிளாஸ் ரூம்!''
''
கிளாஸ் ரூமா! ஓ... இங்க டியூஷன் வேற நடக்குதா... மாஸ்டர் வெளியிலிருந்து வருவாரா?'' எனக் கேட்டேன்.
''
எதுக்கு சார் வெளியில இருந்து வரணும்... அதான் நான் இருக்கேன்ல்ல...'' என்று அவன் தன் பணியை முடித்துஎன் முகத்தில் தண்ணீரைப் பீச்சியடித்துஅதை துடைத்தான்.
''
நீயே கிளாஸ் எடுக்கறேன்னா... நீ படிச்சவனா...''
''
ம்...'' என்றான்ஒற்றை வார்த்தையில்.
''
எதுவரைக்கும் படிச்சிருக்கே?'' என்று கேட்டேன். என் கணிப்புபத்தாவது வரை படித்திருப்பான் என்று சொல்லியது.
''
எம்.ஏ.இங்கிலீஷ் லிட்ரேச்சர்யுனிவர்சிடி பர்ஸ்ட்!''
ஆடிப் போனேன். ''தம்பி... நெசமாவா சொல்றே... எம்.ஏ.இங்கிலீஷ் லிட்ரேச்சர்யுனிவர்சிடி ரேங்க் ஹோல்டர்... இப்படி, 'பார்பர் ஷாப்வெச்சு நடத்திட்டு இருக்கியே... ஏம்பா?'' என்னால் நம்பவே முடியவில்லை.
''
டவுன் பக்கம் போனா என் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும்ன்னு எனக்குத் தெரியும். ரெண்டுமூணு கல்லூரிகளிலிருந்து,விரிவுரையாளர் வேலை வந்தும்நான் தான் போகல,'' என்றான்.
''
ஏன்?''
''
ஏன்னாஅது என் குறிக்கோள் இல்ல!''
''
பிறகு?''
''
எங்க ஊர்லயிருந்து மேல் படிப்புக்காகடவுன் பக்கம் போன பல பிள்ளைகஅங்க இருக்கற ஆங்கில கல்வி முறைய எதிர்கொள்ள முடியாமபடிக்காம ஓடிவந்துடறாங்க. ஏன்னாஇங்க இருக்கற பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்லஒரே ஒரு வாத்தியார் தான் இருக்காரு. அவரு தான் எல்லா பாடங்களையும் எடுப்பாரு. அதனாலஅவர்கிட்ட படிச்சிட்டுப் போற பிள்ளைகளோட கல்வித் தரமும்ஆங்கில வெளிப்பாடும் ரொம்பச் சாதாரணமாக இருக்கும். 
''
உண்மையைச் சொல்லணும்ன்னாஇங்க இருக்கற வாத்தியாருக்கே ஆங்கில இலக்கணத்துல ஏகப்பட்ட தகராறு. அப்புறம்,அவருகிட்ட இங்கிலீஷ் படிச்சா அந்த மாணவர்கள் எப்படியிருப்பாங்க... அதனால தான்அவங்க நகரத்துல இருக்குற ஆங்கில வெளிப்பாட்டை பாத்து பயந்துபடிக்காம திரும்பி வந்திடறாங்க.
''
வலியை உணர்ந்தவனுக்குத் தான்அதை நீக்கும் வழியை அறிய முடியும்ன்னு சொல்வாங்க. நானும் ஒரு காலத்துல அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சவன். அதனால தான், 'நாம் ஏன் இதை மாற்றக் கூடாது'ன்னு நெனைச்சேன். உடனே என் கடையிலேயே,ஒரு ஆங்கில பயிற்சி வகுப்பைத் துவக்கிபள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை ஆங்கில இலக்கணத்தைஎன்னால முடிஞ்ச அளவுக்கு இலவசமா சொல்லித் தரேன். 
''
எதிர்காலத்துல என் கிராமத்தச் சேர்ந்த இளைஞர்கள் நாட்டின் பல்வேறு உயர்ந்த பதவிகள்ல அமரணுங்கிறது தான் என்னோட குறிக்கோள்,'' என்று கூறியபடியேஎனக்கு சவரம் செய்ய உபயோகித்த உபகரணங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாகக் கழுவி,அந்தந்த இடத்திலேயே வைத்துதொடர்ந்தான்...'
''
நான் படிச்ச இங்கிலீஷ் லிட்ரேச்சர் எனக்கு சம்பாதிச்சுக் குடுக்க வேணாம். அதுக்கு இதோ இந்த தொழில் இருக்கு. என் படிப்பு,இந்த கிராமத்துப் பிள்ளைகளுக்கு பயன்பட்டுஅதுஅவங்க எதிர்காலத்துக்கு உதவினா போதும்,'' என்றான்.
மிகப் பெரிய விஷயத்தை வெகு சாதாரணமாக சொல்லும் அவனை பார்க்கும்போதுவியப்பாக இருந்தது. 
நகரத்தில் அவன் வயதொத்த பல இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டடீ-சர்ட் போட்டுடூவீலர்களில் தேவையில்லாமல் பறப்பதும்,மொபைலில் அவசியமே இல்லாமல் மணிக்கணக்கில் பேசித் திரிவதும்மால்களில் உருப்படியே இல்லாதவற்றை அதிக விலைக்கு வாங்கி மகிழ்வதும்மினரல் வாட்டர்கிரடிட் கார்டுலாப்டாப்ஆங்கிலப் படங்கள்கேர்ள் பிரெண்ட். என்று வாழ்க்கையை அனுபவிப்பதாய் நினைத்துஅழிவை நோக்கிச் செல்லுவதை பார்த்து நொந்திருக்கின்றேன். 
ஆனால்அதே காலக்கட்டத்தில்இங்கே ஒரு இளைஞன் இப்படி வாழ்வது என்னை மிகவும் பெருமிதப்பட வைத்தது. 'இவன் தான் விவேகானந்தர் கேட்ட இளைஞனோ...என்று நினைத்தேன்.
அப்போது, 'நீ கூட பெரிய படிப்பு படித்துஒரு வங்கியில் பெரிய பதவியிலிருக்கிறாய்... ஒரு நாளாவதுஒரு நிமிடமாவது பொது நல எண்ணத்தோடு எதையாவது சிந்தித்திருக்கிறாயா...என்றுஎன் மனம் என்னைக் கேட்டது.
நான் தலை குனிந்தேன்.
''
சார்... உடன்பாடு இல்லாத உத்தியோகம்பயன்பாடு இல்லாத ஒரு சமன்பாடு. இதுநான் உடன்பட்டு ஏத்துக்கிட்ட உத்தியோகம். அதனாலமன நிறைவோடசந்தோஷமா இருக்கேன்,'' என குமரன் இயல்பாய் சொல்லஅவனிடம் விடை பெற்றுச் செல்லும்போது, 'இவன் எல்லாருடைய முகத்தை மட்டும் அல்லமனத்தையும் மழித்துப் பளபளப்பாக்கும் மாமேதை...என்று எனக்குள் சொல்லிவணங்கி விடை பெற்றேன்.
எம்.டி. கரண்