Search This Blog

Saturday, November 3, 2012

Snow White and the Huntsman - திரை விமர்சனம்

Snow White and the Huntsman 
- திரை விமர்சனம் 

"ட்வைலைட்" (Twilight) திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் ஆழமாய் இடம் பிடித்த நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (Kristen Stewart), மற்றும் "தோர்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் (Chris Hemsworth) நடிப்பில் வெளி வந்திருக்கும் ஹாலிவுட் படம்.

சமீபத்தில் தான் இப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.

கதை :

சித்திர கதைகளில்(Fairy Tales) புகழ் பெற்ற Snow White & the Seven Dwarfs கதையை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து தந்திருக்கிறார்கள்.

கதைப்படி ஸ்னோவைட் (Snow White), தாபோர் (Tabor) நாட்டின் இளவரசி. இவரது விளையாட்டு தோழன் வில்லியம் (William),  ஸ்னோ வைட்டின் தாயும் நாட்டின் அரசியுமான "ராணி எலியனோர்" (Queen Eleanor) மரணமடைந்து விட தந்தை "ராஜா மேக்னஸ்" (King Magnus) அழகி ரேவன்னாவை (Ravenna) திருமணம் செய்கிறார்.

திருமணம் முடிந்த அன்று இரவே ரேவன்னா தனது சுயரூபத்தை காட்டுகிறாள். கை தேர்ந்த சூனியக்காரியான அவள் அரசனை கொன்று நாட்டை கைப்பற்றுகிறாள். நடக்கும் போராட்டத்தில் தோழர்கள் ஸ்னோவைட்டும்,வில்லியமும் பிரிகிறார்கள். தன்னிடம் சிக்கிய இளவரசி ஸ்னோவைட்டை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறாள் ரேவன்னா.

காலங்கள் செல்ல செல்ல ரேவன்னாவின் சக்தியும் வளர்கிறது,இயற்கை செத்து போகிறது. தன்னுடைய அழகை பாதுக்காக்க இளம் பெண்களை கடத்தி அவர்களின் இளமையை உறிஞ்சுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளின் இதயத்தையும் உண்கிறாள் ரேவன்னா.


இளவரசி வளர்ந்த பின் வழக்கம் போல் மந்திரக் கண்ணாடியிடம் செல்லும் ரேவன்னா இந்த உலகில் தன்னை கொல்ல ஒருவரால் மட்டுமே முடியும் என்றும் அது இளவரசி ஸ்னோவைட் தான் என்பதையும் அறிந்துக்கொள்கிறாள். இளவரசியை கொன்று அவள் இதயத்தை உட்கொண்டால் சாகவரம் கிடைக்கும் என்றும் தன் இளமையை பாதுக்காக்க இளம் பெண்களை தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுரை கூறுகிறது கண்ணாடி .

சிறையில் இருந்து தப்பிக்கும் ஸ்னோவைட் இருண்ட காட்டுக்குள் நுழைகிறாள். ரேவன்னாவின் சக்திகள் அங்கே வேலை செய்யாது என்பதால் மனைவி இறந்த சோகத்தில் குடிகாரனை திரியும் ஹன்ட்ஸ்மேனை, செத்து போன மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதாக சொல்லி இளவரசியை கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைக்கிறாள் ரேவன்னா.

காட்டுக்குள் இளவரசியை கண்டுபிடிக்கும் ஹன்ட்ஸ்மேன் உண்மையை தெரிந்துக்கொண்டு மனம் மாறுகிறான். தன் மனைவியின் சாவுக்கு காரணமாய் இருந்த ரேவன்னாவின் சகோதரன் "பின்"னையும் (Finn) கொல்கிறான்.

ரேவன்னாவை அழிக்க தன்னால் மட்டும் தான் முடியும் என்பதை தெரிந்துக் கொண்டு ஒளிந்து வாழும் தன் மக்களை தேடிப்போகிறாள் ஸ்னோவைட். தன் திட்டங்கள் எதுவும் நிறைவேறாத விரக்தியில் தானே களமிறங்கும் ரேவன்னா உருமாறி விஷம் கொண்ட ஆப்பிள் மூலம் இளவரசியை கொல்கிறாள்.

இறந்த இளவரசி உயிர்பெற்றாளா? ரேவன்னாவின் மந்திர சக்தியை முறியடித்தாளா?நாட்டு மக்களின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது படம்.

நடிகர்/நடிகைகள்:
ஸ்னோவைட் (Snow White) - கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (Kristen Stewart):

ஸ்னோவைட்டாக வரும் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் ஆரவாரமின்றி வந்து போகிறார். இன்னும் சிறிது வித்யாசம் காட்டி நடித்திருக்கலாம். பல இடங்களில் ட்வைலைட் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
சண்டை காட்சிகளில் இன்னும் சற்று ஆக்ரோஷம் காண்பித்திருக்கலாம், மிகவும் சக்தி வாய்ந்த ரேவன்னாவை சாதாரண கத்தியால் கொன்று விடுவது ஒட்டவில்லை.

ஹன்ட்ஸ்மேன் (Huntsman) -கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் (Chris Hemsworth):

படத்தில் நாயகிகளுக்கே முக்கியத்துவம் என்பதால் இவர் அதிகமாக எடுபடவில்லை. நடிப்பதற்கும்,சண்டையிடுவதற்கும் அதிக வாய்ப்பு இல்லை, வெறுமனே வந்து போகிறார்.

ரேவன்னா (Ravenna) - சார்லிஸ் தேரோன் (Charlize Theron):
SNOW WHITE AND THE HUNTSMAN

படத்தில் மனதை கவர்பவர் சூன்யக்காரி ரேவன்னாவாக வரும் நடிகை சார்லிஸ் தேரோன் தான். தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும்,வசன உச்சரிப்பாலும் கன கச்சிதமாக பொருந்துகிறார். படத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் படம் முடிந்த பின்னும் மற்ற கதாபாத்திரங்களை ஓரங்கட்டி விட்டு முதலிடத்தைப் பிடித்துகொள்கிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் அப்ளாஸ் வாங்கி விடுகிறார்.

பின் (Finn) - சாம் ஸ்ப்ருயல் (Sam Spruell):

அடுத்ததாக ரேவன்னாவின்  சகோதரராக வருபவர். கச்சிதமாக பொருந்துகிறார் இந்த வேடத்தில். அனாவசியமாக பாதியிலே செத்துப் போகிறார் மனிதர்.

இவர்கள் தவிர படத்தில் வரும் குள்ளர்கள், சிறு வயது தோழன் வில்லியமாக வரும் நடிகர் சாம் கிளப்பின் (Sam Claffin) என்று எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.


Snow White and the Huntsman - 

Click this link to watch Snow White and the Huntsman online :-

http://www.movie2k.to/Snow-White-and-the-Huntsman-watch-movie-1705158.html

No comments: