Search This Blog

Thursday, November 8, 2012

மாற்றான் - திரை விமர்சனம்

 மாற்றான் - திரை விமர்சனம் 


 நடிகர் சூர்யாவின் மற்றுமொரு  புதிய முயற்சி.

கதை :
மரபணு விஞ்ஞானியான ராமசந்திரன்  (சச்சின் கடேகர்),  தன்னுடைய   ஆராய்ச்சியின்  ஒரு  பகுதியாக நோய் நொடியில்லாமல் 100  ஆண்டுகள் வாழும் மனிதனை உருவாக்கும் முயற்சியில் மனைவியின் வயிற்றில் வளரும்  கருவில் அவருக்கே  தெரியாமல் சில மரபணு மாற்றங்களை செய்ய அதன் விளைவாக ஒரே இதயத்துடன் ஓட்டிப் பிறக்கின்றனர் விமலனும்  அகிலனும் (சூர்யா).மனைவியின் உதவியோடு புதிய தொழில் தொடங்கும் ராமசந்திரன் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய வெற்றியடைகிறார். விமலனும்  அகிலனும் ரெட்டையர்கள் ஆனாலும்  எதிரெதிர் துருவமாக வளர்கிறார்கள். 

ஒருவர்  கதை கவிதை இலக்கியம் என்று புத்தக புழுவாக  இருக்க , மற்றவரோ ஆட்டம் பாட்டம் என பொழுதை போக்குகிறார். நடுவில் தங்கள் நிறுவனத்தில் மொழிப் பெயர்ப்பாராக சேரும் அஞ்சலி (காஜல் அகர்வால்) மேல் இருவருமே காதல் கொள்ளுகிறார்கள். அவரோ விமலனை காதலிக்க மகிழ்ச்சியாக வழி விடுகிறார் அகிலன். 

ராமசந்திரன் தன்னுடைய நிறுவன பொருட்களில் ( எனர்ஜியான்) அரசாங்கத்தால் தடை செய்யப்பட ஒரு ரசாயனத்தை பயன்படுத்துகிறார் என்ற சந்தேகத்தால் அவரை வேவு பார்க்க தொழில் எதிரிகள் முயற்சி  செய்கிறார்கள். அதில் வோல்கா என்னும் ரஷியப் பெண் அஞ்சலியின் உதவியுடன் தொழிற்சாலைக்குள் புகுந்து பல உண்மைகளை கண்டடைகிறார்.


நடுவே மர்மமான முறையில் ராமச்சந்திரனின் தொழில் எதிரி,அவர் நிறுவனத்தில் வேலைப் பார்த்த விஞ்ஞானி ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.   இதன் பின்னணியை தெரிந்துக் கொள்ளும் வோல்காவும் கொல்லப்படுகிறார். வோல்கா இறக்கும்முன் ஆதாரங்கள்  அடங்கிய பென் ட்ரைவை விழுங்கி விடுகிறார்.   பென் ட்ரைவை கைப்பற்றும் விமலனும் ரவுடிகளால் கொல்லப்பட, ரெட்டையர்கள் பிரிக்கப்படுகிறார்கள். 

நடந்தது எதுவும் அறியாத அகிலனோ புது வாழ்க்கையை ஏற்று வாழ துவங்கும்போது விமலனை  கும்பலில் ஒருவனை எதேச்சையாக பார்த்து விடுகிறார். இதன் நடுவே  அலுவலகத்தில் நடக்கும் ரெய்டில் விமலன் கொல்லப்பட்ட  அன்று திருடப்பட்ட பொருட்களை கண்டுப்பிடிக்க முதல் முறையாக  தந்தை மேல் சந்தேகப் படுகிறார். அதன்  பிறகு  ரஷியாவுக்கு பயணிக்கிறது கதை.

காஜல் அகர்வால் உதவியுடன் பல திடுக்கிடும் உண்மைகளைக் கண்டுப்பிடிக்கிறார் அகிலன். அதோடு காயத்திற்கு  மருந்தாக வரும் காஜாலோடும் நெருங்குகிறார்.பெற்ற தந்தையின் அசிங்கமான மறுப்பக்கத்தை கண்டறியும் சூர்யா அடுத்து என்ன செய்தார்?  எனர்ஜியானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கண்டுப்பிடித்தாரா? கொடூரத்தந்தைக்கு பாடம் புகட்டினாரா? என்பது தான் படத்தின் மொத்தக்கதையும்.

கலைஞர்கள்:
இயக்குனர் கே. வி.ஆனந்த் மீண்டும் வித்தியாசமான கதைக்களத்துடன் கலக்குகிறார். இதன் கதை தமிழ் சினிமாவுக்கு புதுசு. படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் உணர முடிகிறது. 
முதல் பாதியில் காதலும் காமெடியுமாக நகரும் கதை,இடைவேளைக்கு பிறகு வேகம் எடுக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகனை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர். அதற்காகவே அவரைப் பாராட்டாலாம். படத்தின் க்ளைமாக்ஸ் சரியான தீர்ப்பு என்று சபாஷ் போட வைக்கிறது.ஆனால் இந்தப் படத்திலும் சூர்யா விருது வாங்குவது போல் முடித்திருப்பது "ஏழாம் அறிவு" படத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் முத்தக் காட்சி செயற்கையாக  என்று யோசித்தால் அப்புறம் தான்  தெரிந்தது அது கிராபிக்ஸ் மாயம் என்று.
நாயகர் சூர்யா மீண்டும் தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக விமலன் இறக்கும் காட்சியில் உதவி கேட்டு கதறும் இடத்தில் நெஞ்சை உருக வைத்து விடுகிறார். இறுதியில் தந்தை கொடூரன் என்று தெரிந்தும் "சரண்டர் ஆகி எல்லாத்தையும் விட்டிருங்க,உங்கள நான் காப்பாத்துறேன்" என்று கெஞ்சும் இடத்திலும் சரி, எலிகள் கடித்து குதற விட்டுச் செல்லும் இடத்திலும் நல்ல நடிப்பு. தியேட்டரில் காதல் பாடம் நடத்தும் காட்சியில் சிரிக்க வைக்கிறார்.ஆனால் படம் முடியும்போது மனதில் நிற்பது ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் அகிலன் கேரக்டர் தான். 
நாயகி காஜல் சரியான தேர்வு. இப்படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். காதலன் இறக்கும் காட்சியில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் காட்டியிருக்கலாம். வோல்கா செத்த செய்தி கேட்டு கதறும் காஜல், காதலித்த விமலன் சாவில் சாதாரணமாக நிற்பது மனதை நெருடுகிறது. இயக்குனர் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம்.மற்ற காட்சிகளில் குறை கூற முடியாத நடிப்பு. பாடல்களில் அழகாக வந்து மனதை அள்ளுகிறார்.
சச்சின் கடேகர் வாய்ப்பே இல்லை. ஆரம்பத்தில் சாதுவாக வரும் இவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல மாறி விடுகிறார். ஒவ்வொரு காட்சியிலும்  ரசிகர்களின் வயிற்றெரிச்சலை  கொட்டிக் கொள்கிறார். ஒரு நடிகனின் வெற்றி அது தானே. இந்த வருடத்தின் சிறந்த வில்லன் விருது இவருக்கு தான்.இனி இவரை நிறைய படங்களில்  காணலாம்.
சூர்யாவின் அம்மாவாக வரும் நடிகை தாரா, கச்சிதமாக பொருந்துகிறார்.  குழந்தைகளைப்  பிரிக்க டாக்டர்கள் முயற்சிக்கையில் அவர்களை அடித்து விரட்டுவதும், குழந்தைகள் மேல் பாசத்தை பொழிவதும், கணவர் மேல் சந்தேகம் வந்து அவர் மேலேயே புகார் கொடுப்பது என்று தன்  சிறப்பாக செய்திருக்கிறார்.

வோல்கா,அந்நியன் பாணியில் காதலை சொல்லும்  ஆராய்ச்சியாளர், சச்சின் கடேகரின் உதவியாளராக வரும் நடிகர் ரவி பிரகாஷ், சர்வாதிகாரியாக வரும் நடிகர் என்று அனைவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. "நாணி கோணி ராணி", "கால் முளைத்த காற்றே", "தீயே தீயே" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். 

மாற்றான் புது முயற்சி.

மாற்றான் - 

No comments: