Search This Blog

Saturday, November 17, 2012

துப்பாக்கி – விமர்சனம்


துப்பாக்கி – விமர்சனம்
முருகதாஸ், விஜய் கூட்டணியில் பல சர்ச்சைகளை தாண்டி ரசிகர்களின் பெரும் எதிபார்ப்புகளோடு வெளியாகி இருக்கும் படம். துபாயில் 15’ம் தேதி வெளியான இப்படத்திற்கு 22’ம் தேதி வரை சீட்டே இல்லை. எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ஒரு வழியாக டிக்கெட் வாங்கி படத்தைப் பார்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
பலர் இப்படத்தை விஜயகாந்த் பாணியில் வந்திருப்பதாக விமர்சித்து உள்ளார்கள். என்னைக் கேட்டால் இது முருகதாஸ் படம். தீவிரவாதி கதை என்றாலே அது விஜயகாந்த் படமாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? இப்படம் விஜய் மற்றும் முருகதாசுக்கு மற்றுமொரு மகுடம்.
கதை:
ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார் விஜய். இவர் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போவதால் ரயில் நிலையத்தில் இருந்து கையோடு பெண் பார்க்க இழுத்துப் போய் விடுகிறார்கள் பெற்றவர்கள். மணப்பெண் நிஷாவை(காஜல் அகர்வால்) பிடிக்கவில்லை என்று கூறும் விஜய்,அடுத்தடுத்த சந்திப்புகளில் காதல் வசப்படுகிறார்.
நண்பன் சத்யனுடன் ஊர் சுற்றும் வேளையில் எதேச்சையாக ஒரு தீவிரவாதி கண்ணில் மாட்ட கதை சூடு பிடிக்கத் தொடங்குகிறது. கையில் மாட்டிய தீவிரவாதி மூலமாக மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்த போகும் தீவிரவாதிகளின் திட்டத்தை தெரிந்துக் கொண்டு தன் ராணுவ நண்பர்களின் உதவியோடு  12 பேரையும் போட்டுத் தள்ளி தீவிரவாதிக் கூட்டத்தின் தலைவனை பகைக்கிறாய்.
தீவிரவாதக் கும்பலின் தலைவன் சாதரணமானவன் அல்ல, அடுத்தடுத்து நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன் தங்கையையே பணயமாக வைத்து தீவிரவாதிகள் பலரைப் போட்டுத் தள்ளுகிறார்.
இறுதியில் தீவிரவாதிக் கும்பலின் தலைவனை கூண்டோடு அழிக்க யாரும் எதிர்பாராத தற்கொலை தாக்குதலுக்கு தயாராக அவனை சந்திக்க செல்லும் விஜய்க்கு அங்கு காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி.
தன்னுடன் சேர்த்து தீவிரவாதி கும்பலையும் அழிக்க தற்கொலை தாக்குதல் திட்டத்துடன் செல்லும் விஜய்க்கு அங்கே காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? தீவிரவாதி தலைவனுக்கு பின்புலமாக செயல் பட்ட அந்த பெரிய தலை யார்? தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளும் விஜய் எப்படி தப்பித்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது படம்.  
நடிகர்/நடிகைகள்:
ஜக்தீஷ்(ராணுவ அதிகாரி)-விஜய்:
முதல் முறையாக தன்னுடைய மசாலா பார்முலாவை விட்டு வெளியே வந்திருக்கிறார் விஜய். அதற்கு ஒரு சபாஷ்.
இப்படத்திற்காக பெரிதும் மெனக்கட்டு இருப்பது படத்தின் பலகாட்சிகளில் உணர முடிகிறது. சண்டை காட்சிகள் பலே போட வைக்கின்றது. சிரிக்காமல் விறைப்பாக பேசியே சிலக் காட்சிகளில் சிரிக்க வைத்து விடுகிறார். கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதியிடம் ஏன்? எதற்கு? என்று எதுவும் கேட்காமல் விரலை வெட்டி விட்டு அதன் பிறகு கேள்வி கேட்கும் இடம் “நச்.
“நாட்டை அழிக்க அவனுங்க உயிரை விட தயாரா இருக்கானுங்க, நாட்டை பாதுக்காக்குற நாமளும் உயிரை விட தயாராக இருக்கணும் என்று கூறும் இடத்தில் “நச். விஜய் படத்தில் பொதுவாக இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகள் இதில் மிஸ்ஸிங். டைரக்டருக்கு நன்றி.
உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது,எனக்கு சஸ்பென்ஸ்அ உடைக்கிறது பிடிக்காது என்று சத்யனிடம் கூறும் விஜய், இறுதியில் சஸ்பென்சோடையே செத்துப் போ என்று வில்லனை போட்டுத் தள்ளுவது லாஜிக். நல்லவேளை எப்படி செய்தேன் என்று கூறி இழுக்காமல் பட்டென்று வேலையை முடித்து விடுகிறார்.
ராணுவ வீரர்களின் மனதை ஒவ்வொரு காட்சிகளிலும் பிரதிபலிக்கிறார். படம் முழுக்க ஒரு ஸ்டைலிஷான விஜயை காண முடிகிறது,வெல் டன் விஜய்.
நிஷா-காஜல் அகர்வால்:
அழகு+கவர்ச்சி=காஜல் அகர்வால். நான்கைந்து காட்சிகள்,அப்புறம் பாடல்கள் அவ்வளவு தான் இவர் வேலை முடிந்து விடுகிறது. குத்துச் சண்டை வீராங்கனையாக வரும் இவர் படத்தின் ஆரம்ப காட்சி தவிர வேறு எங்கும் சண்டை போடவில்லை. நல்ல நடிகை இவர் நடிக்கவும் வாய்ப்பு அளித்திருக்கலாம்.
விஜயிடம் முத்தம் வாங்குவதற்காக இவர் கொடுக்கும் விளக்கங்கள் ரசிக்க வைக்கின்றன,ஆனால் கடைசி வரை முத்தம் கொடுப்பார் என்று நம்ப வைத்து ஏமாற்றி விடுகிறார்.
சத்யன்:
படம் முழுக்க விஜயுடன் வரும் வேடம். காமெடி மட்டும் இல்லாமல் நடிக்கவும் நல்ல வாய்ப்பு. அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார். ஒரு கப்போர்டுக்குள் தீவிரவாதியையும் இன்னொரு கப்போர்டுக்குள் காஜலையும் பார்க்கும் இவர், கப்போர்டுக்குள் துணிமணி எதுவும் வைக்கவே மாட்டியா என்று நமக்கு தோன்றும் கேள்வியை கேட்டு,அதற்கு விடையும் கொடுத்து சிரிக்க வைத்து விடுகிறார்.       
ஜெயராம்:
படத்தில் இவருக்கு வேலையே இல்லை, வெறும் நகைச்சுவைக்காக மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது சீரியஸ் படம் பெரிய அளவு நகைச்சுவையை எதிர்ப்பார்க்க முடியாது என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகரை படத்தில் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
வித்யுத் ராம்பால்-வில்லன்:
இவரா தீவிரவாதி என்று ஆச்சரியப்பட வைக்கிறார். ஆள் அழகாக ஹிந்தி பட ஹீரோ போல் இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். படம் விஜயை சுற்றியே சுழல்வதால் கிடைத்த காட்சிகளில் சபாஷ் போடா வைக்கிறார். பல காட்சிகளில் கண்களாலேயே பேசுகிறார்.
முருகதாஸ்:
ஏழாம் அறிவு படத்தில் விட்டதை இப்படத்தில் பிடித்திருக்கிறார். படத்திற்கு படம் எதாவது செய்தி சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போல. இப்படத்தில் Sleeper Cell என்னும் சமாச்சாரத்தை கையில் எடுத்து இருக்கிறார். படத்தின் இறுதி சண்டைக் காட்சி கில்லி படத்தை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை. சற்று வித்யாசமாக யோசித்து இருக்கலாம். பாடல்கள் அனைத்தும் பிரமாதம் ஆனால்,வேகமாக செல்லும் படத்திற்கு கடிவாளம் போடுகிறது பாடல்கள். பாடல்கள் வரும்போது பலரும் அவசரமாக கழிப்பறை சென்று வந்ததை காண முடிந்தது.
மனோபாலா,விஜயின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் என்று பலர் இப்படத்தில் இருந்தாலும் சில காட்சிகளே வருவதால் மனதில் நிலைக்கவில்லை.

இசை:
File:Harris Jayaraj 2.jpg
படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக விஜய், ஆண்ட்ரியா பாடிய Google Google, Antartica, அலைக்கா போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றது.
துப்பாக்கி – சத்தமாக வெடித்திருக்கிறது.

துப்பாக்கி-

2 comments:

Anonymous said...

This is my first time go to see at here and i am
genuinely pleassant to read everthing at single place.


my web page: diseño web

Anonymous said...

Everything is very open with a precise description of the issues.

It was definitely informative. Your site is extremely helpful.
Thanks for sharing!

Also visit my site - dog clothes