Search This Blog

Saturday, September 15, 2012

ஆவியே சொல் : பகுதி-1-கொன்றது நீ தானா?

ஆவியே சொல் : பகுதி-1

செங்கதிர் 

அன்பு நண்பர்களே, 1998'ம் ஆண்டு  வார இதழில் வெளி வந்த ஆவியே சொல் திகில் தொடர்  பலருக்கு நினைவிருக்கலாம். அக்கதைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


கொன்றது நீ தானா?

(ராணி வார இதழ் 19-04-1998 மற்றும் 26-04-1998 பதிவு)I

"விநாயகப்  பெருமானே எல்லாம்... நல்ல படியா... நடக்கணும். நான் சொல்றதைக்  கேட்டு ருக்மணி ஆத்திரப்படக்கூடாது. நீ தான் அவளுக்கு பொறுமையை கொடுக்கணும்" ராமலிங்கம் மனம் உருக வேண்டிவிட்டு ரோட்டை எட்டிப் பார்த்தான்.

ருக்மணியை இன்னமும் காணவில்லை!

"சொன்னால்... சொன்ன நேரத்துக்கு,வந்து விடுவாளே..." ராமலிங்கத்தின் மனம் தவித்தது.

கிளம்பிவிடலாமா என்று நினைத்த போது தூரத்தில் ருக்மணி வருவது தெரிந்தது,அருகில் வந்ததும் அவள் கையை இறுக பிடித்துக்கொண்டான்.

"ஏன் தாமதம்" என்பது போல் பார்த்தான்.

"என்ன ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா..." சிரித்துக்கொண்டே கேட்டால். அந்த சிரிப்பில் நக்கல் தெரிந்தது.

ராமலிங்கம் அதைக்கண்டுக் கொள்ளவில்லை. அந்த நக்கலிலும், அடிக்கடி பளீரென சிரிக்கும் அவள் அழகிலும் தான் அவன் மனதை பரிகொடுத்திருந்தான்.

ராமலிங்கத்துக்கு சொந்த ஊர் ஈரோடு. படித்து முடித்ததும் ராசிபுரம் கலைக்கல் லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. அதே கல்லூரியில் ருக்மணி பேராசிரியை.

இருவருக்கும் ஒரே வயது, "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்றே அர்த்தம்" என பாடும் பருவம், பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொண்டனர்.

அவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் "விநாயகர் பூங்கா" வில் தான் இன்றும் சேர்ந்திருந்தனர். ருக்மணி வழக்கம்  போல கலகலப்புடன் இருக்க...ராமலிங்கம் மட்டும் தேர்தலில் டெபாசிட் பறிகொடுத்தவன் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.

"என்ன வந்ததில் இருந்தே பார்க்கிறேன் எதுவுமே பேசமாடேங்குறீங்க ...லேட்டா வந்ததால் கோபமா..."

"இல்லடா..."

"அப்ப...இன்னைக்கு அய்யாவுக்கு மூடு சரி இல்லையா..."

"இல்லடா..."

"ஐயோ...போரடிக்குது. இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சி...ஏன் இப்படி இருக்கீங்க.எதாவது பிரச்சனையா?"

" இல்ல... ருக்கு. எனக்கு ஒரு சந்தேகம். நம்மள மாதிரி காதலிக்கிறவங்க எல்லாரும் கல்யாணம் செஞ்சிக்கிடுவாங்களா..."

"என்ன திடீர்ன்னு இந்த ஆராய்ச்சி..."

"காரணமாத்தான் கேட்கிறேன் சொல்."

"எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. உள்ளத்தைப் பார்க்காமல்,உடலை மட்டுமே நினைக்கிறவங்க காதலர்களே இல்லை. நம்மள மாதிரி சிலர் தான் உணர்வுகளை பகிர்ந்துக்கிட்டு... உண்மையா காதலிக்கிறாங்க. அவுங்க காதல் கூட ஜெயிக்கிரதில்லை, அதெல்லாம் தலை விதி. நாம் தான் சீக்கிரம் கல்யாணம் கட்டிக்க போறோமே...அதப்பத்தி ஏன் பேசணும்."

"இல்ல ருக்கு...அதப்பத்தி தான் பேசப்போறேன்,ருக்கு...எனக்கு வீட்டில் வேற -பெண் பார்த்துட்டாங்க. எங்க அம்மா...அந்த பொண்ணுகிட்ட வாக்கு குடுத்துட்டாங்களாம். நான் மறுத்தால்... செத்துப்போவேன்னு மிரட்டுறாங்க.
எனக்கு வேற வழியே தெரியல...ருக்கு...ப்ளீஸ்...ருக்கு....என்னை மறந்துவிடு.  நீ எங்க இருந்தாலும் நல்ல படியா வாழணும் . நான் வர்றேன்." சொல்லிவிட்டு ராமலிங்கம் எழுந்து நடந்தான்.

"ராமு..." ருக்மணியின் கதறல் கேட்டு நின்றான்.

"இப்படிச் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல...உங்க அம்மாவை எதிர்க்கும் துணிச்சல் இல்ல..."

"இல்ல...ருக்கு....எங்க அம்மாவை எதிர்க்கும் துணிச்சல் எனக்கு இல்ல...என்னை மன்னிச்சிரு" உறுதியான குரலில் சொல்லிவிட்டு ராமலிங்கம் போய் விட்டான்.

ருக்மணி அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சிலை போல் நின்றாள்.

II

எத்தனை நாட்களுக்குத்தான் ராமலிங்கத்தையே நினைத்துக்கொண்டிருக்க முடியும்? ருக்மணியும் மனதுக்கு ஒரு முடிவு எடுத்தால்...இனி வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டியது தான் என்று.

ராசிபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ராஜாராமன் ஜாதகம் ருக்மணியின் ஜாதகத்துடன் பொருந்தி இருந்தது. ராஜாராமன் உண்மையிலேயே பெயருக்கு எட்ட்றபடி ராஜா போல இருந்தான்.

அடுத்த முகூர்த்தத்திலேயே அவன் ருக்மணியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

அதே சமயம் ராமலிங்கம் ராதாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.

புதுமாப்பில்லையான ராமலிங்கம் ராதாவின் அரவணைப்பிலும்,பாசத்திலும் ருக்மணியை சுத்தமாக மறந்து விட்டான். அது போலவே ருக்மணியும் ராமலிங்கத்தை கண்டுக்கொள்ளவில்லை.

கல்லூரியில் நேருக்கு நேர் பார்த்தால் கூட பேசுவதை தவிர்த்தனர்.

காதல் - அவளுக்கு கேட்ட கனவு போலத் தோன்றியது.

ஆறு மாதம் எப்படி போனது என்பது தெரியாமல் உருண்டோடி இருந்தது.

திடீரென ஒருநாள்...இடி போல அந்த செய்தி வந்தது.

ருக்மணி கணவன் ராஜாராமன் லாரி மோதி அந்த இடத்திலேயே செத்துப் போனான்.

ருக்மணி அழுதாள் ,புரண்டாள். அவள் மனதில் எதிர்காலம் இருளாக தோன்றியது.

தகவல் தெரிந்ததும் ராமலிங்கம் பதறிப் போனான். உடனே ருக்மணி வீட்டுக்கு போனான்.

ருக்மணியின் கோலம் அவன் மனதை உருக்கியது,கண்களில் நீர் வழிய அவளைப் பார்த்தான். அதே சமயத்தில் அவளும் பார்த்தாள்.

என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ...சொன்னான். ருக்மணி மனதை அது ஆறுதல் படுத்தியது.

தாய் வீட்டுக்கு வந்து விட்ட ருக்மணி இப்போது அங்கிருந்து தான் கல்லூரிக்கு போய் வந்துக்கொண்டிருந்தாள். சின்ன வயது தான் என்பதால் பூவையும் போட்டியும் இழக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

பழைய ருக்மணி போல மங்களகரமாக கல்லூரிக்கு போய் வந்தாள். முகம் மட்டும் சோகத்தை வெளிப்படுத்தியது.

ராமலிங்கத்துக்கு அவளை பார்க்கும்போதெல்லாம் வேதனையாக இருந்தது. பேராசிரியர் ஆயிற்றே...அழவா முடியும்? முன்னாள் காதலியின் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட சோகத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டான்.

அன்று கல்லூரியில் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைத்த போது, "ருக்கு...உனக்கா இந்த நிலமை? என்னால தாங்க முடியலடா" என்றான்.அடுத்து பேச வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை அடைக்கவே, கண்ணீர் மல்க எழுந்து போய் விட்டான்.

சலனமற்று இருந்த குளத்தில் கல்லை வீசியது போல இருந்தது ருக்மணிக்கு. அன்று கல்லூரியில் இருந்து திரும்பிய அவள் மனம் முழுக்க ராமலிங்கம் தான் இருந்தான். அவன், சொன்ன வார்த்தைகள் சுவரில் வீசப்பட்ட பந்து போல மீண்டும் மீண்டும் வந்து சென்றது.

சிலசமயம் ராமலிங்கத்தை பார்க்க வேண்டும் என்று அவள் மனம் துடிதுடிக்கும். அடக்கிக் கொள்வாள்.

எத்தனை நாட்களுக்கு தான் உள்ளத்து உணர்சிகளை அடக்க முடியும்? திரை போட்டு மூட முடியும்? அதிலும் ராமலிங்கம் அவள் மேல் காட்டும் கள்ளம் கபடம் இல்லாத பாசம் அவளை திக்கு முக்காட வைத்தது. ராமலிங்கத்தின் அரவணைப்பு கிடைக்காதா என்று அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது.

இந்த ஏக்கமும் உணர்சிகளும் ருக்மணியை தலை கீழாக மாற்றி இருந்தன.ராஜாராமனை அவள் சுத்தமாக மறந்து விட்டாள். அவனுடன் வாழ்ந்தது அவளுக்கு கனவு போல தோன்றியது.

"ராமலிங்கம் தான் இனி என் புருஷன்" என்று அவள் மனம் நினைத்தது. அந்த நினைப்பை செயல் படுத்த ருக்மணி முனைந்தாள்.

ஏற்கெனெவே பழகிய தைரியத்தில், "இன்னைக்கு சாயங்காலம்,உங்க கூட கொஞ்சம் பேசணும் வர முடியுமா?" என்றாள். ராமலிங்கம் சரி என்பது போல தலையை ஆட்டினான்.

காதலிக்கும்போது அவர்கள் எந்த பூங்காவில் சந்தித்து கொள்வார்களோ...அதே பூங்காவில் வைத்து சந்தித்துக் கொண்டனர்.

இருள் கவ்வத் தொடங்கிய நேரம்...தனிமை கொடுத்த உற்சாகம்...ருக்மணி அவன் மடியில் படுத்து அழுதாள். அவள் முதுகை அவன் வருடி விட்டான்.

"என்னங்க...உங்கள என்னால் மறக்க முடியல. வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டினாலும், ஒவ்வொரு நாளும் நீங்க என்கூட இருக்கிற மாதிரி தான் நினைத்தேன். எப்பவும் உங்க நினைப்பு தான் என் மனதை ஆட்டுது. உங்கள பாக்காம, பேசாம,பழகாம என்னால இருக்க முடியாது " என்றாள்.

அவன் அவளை புரியாமல் பார்க்க,ருக்மணி தெளிவாகப் பேசினாள்.

" என்னை நீங்க திருமணம் செய்யணும் என்ற கட்டாயம் இல்ல. சின்னவீடு மாதிரி வச்சிக்கிடுங்க. ஆனால் உங்க பொண்டாட்டி என்பதிற்கான அத்தனை மரியாதைகளையும் எனக்கு குடுக்கணும். நான் சொல்றது உங்களுக்கு பிடிக்கலைனா...என்னை நீங்களே கொன்னுடுங்க..." - சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

ராமலிங்கத்தின் மனம் தடுமாறியது.

"சரி அழாதே...ராசிபுரத்திலேயே ஒரு வீடு பார்த்து தருகிறேன்.என் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி ஒரு வீடு இருக்கு. நாம அங்க இருக்கலாம், என்ன போதுமா? என்றான்.

ருக்மணியின் அழுகை நின்றது. வெட்கத்துடன் சிரித்தாள். அதே வேகத்தில் அவனை இறுக அணைத்து முத்த மழையில் மூழ்கடித்தாள்.

ராமலிங்கத்தின் உடம்பு ருக்மணியின் உதடு பட்டு சிலிர்த்தது.

இதை ஒரு ஆவி மரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த ஆவி - ருக்மணியின் புருஷன் ராஜாராமன்.

III

ருக்மணி முகத்தில் மீண்டும் குளுமை படர்ந்தது. கலகலப்பு வந்து தொற்றிக்கொண்டது. அவளது கிண்டல் பேச்சு ராமலிங்கத்தை கிறங்கச் செய்தது.

கட்டிய மனைவி ராதா...பரம்பரை எதிரி போல் அவனுக்கு தோன்றியது. அவளிடம் பேசவே அவனுக்கு பிடிக்கவில்லை. ருக்மணியே கதி என்று கிடந்தான்.

இதையெல்லாம் ஓசை இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்த ராஜாராமன் ஆவிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு நல்ல குடும்பத்தை ருக்மணி சீரழிக்கிறாளே என்று கோபம் வந்தது.

அவர்கள் உறவை பிரிக்க என்ன செய்யலாம் என்று அந்த ஆவி யோசித்தது.

கம்ப்யூட்டர் வேகத்தில் அது ஒரு திட்டத்தை தயாரித்து. அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்காக காத்து இருந்தது.

அன்று...அமாவாசை.

அவைகளுக்கு அமாவாசை என்றாலே கொண்டாட்டம் தான். அன்றைய தினம் தான் ஆவிகளால் பிறரது உடலுக்குள் எளிதாக புகமுடியும்.

ராஜாராமன் ஆவி இந்த அமாவாசையை தவற விடக்கூடாது என்று தீர்மானித்தது.

முதலில் ராதாவின் உடம்புக்குள் புகவேண்டும். அவளை இயக்க வேண்டும். அதன் மூலம் ராமலிங்கத்தை திருத்தி நல்லவன் ஆக்க வேண்டும். அவனிடமிருந்து ருக்மணியை பிரிக்க வேண்டும். இது தான் ராஜாராமனின் திட்டம்.

அன்றிரவு...

கடிகாரம் 11 தடவை அடித்து ஓய்ந்தது.

ராதாவுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.

திடீரென தன் அருகில் யாரோ வருவது போல் உணர்ந்தால்.

"யாரது...?"

சத்தம் இல்லை.

அது வேறு யாரும் இல்லை ராஜாராமனின் ஆவி தான்.

அடுத்த சில நிமிடங்களில்  ராஜாராமனின் ஆவி மெல்ல மெல்ல ராதாவின் உடலுக்குள் ஊடுருவி ஜம்...மென்று உட்கார்ந்துக்கொண்டது. அதன் பிறகு நடந்தது எதுவும் ராதாவுக்கு சுத்தமாக தெரியாது.

பக்கத்தில் படுத்துக்கிடந்த ராமலிங்கத்தின் முதுகில் அவள் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள்.

திடுக்கிட்டு விழித்த ராமலிங்கம், "என்ன ராதா இன்னும் தூங்கலையா...?" என்றபடியே திரும்பினான். ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் அவள் முகத்தை கூர்ந்து கவனித்தவன் சப்தநாடிகளும் ஒடுங்கி போகும் வகையில் அதிர்ந்தான்.

ராதாவைப் பார்க்க வித்யாசமாக இருந்தது. அவள் பார்வை வழக்கம் போல இல்லை.

பயந்துப்போன ராமலிங்கம் "ராதா...என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரியா இருக்கிறாய்...உடம்புக்கு ஏதாவது செய்யுதா" என்றபடி அவள் உடம்பை தொட்டான்.

மறுவினாடியே ராதா உடம்பை ஒரு குலுக்கு குலுக்கினாள். அதே வேகத்தில் ராமலிங்கத்தின் கையைத் தட்டி விட்டாள். ஒரு ஆணின் பலத்தை பெற்று விட்டவள் போல ராதா காணப்பட்டாள்.

"நீ செய்வது சரி அல்ல" என்று உறுதியான ஆண் குரலில் கூறினாள். பிறகு அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.அவள் உடம்பில் இருந்து ஆவி வெளியேறியது.

கண்விழித்த பொது அவளிடம் ராமலிங்கம் நடந்த எல்லாவற்றையும் கூறினான். அவளுக்கு புரிந்து விட்டது தனது உடம்பில் ஒரு ஆவி புகுந்து விட்டு போகிறது என்று.

மறுநாளும் ராதா அதே போல் ஒரு அனுபவத்தை சந்தித்தாள். அதன் பின் ராதாவின் நடவடிக்கைகள் அடிக்கடி மாறின.

ஆண் குரலில் பேசினாள். ஆண் போலவே நடக்க தொடங்கினாள்.

இடையிடையே ஏதாவது சொல்லுவாள், இன்ன ஆபத்து வரப்போகிறது என்பாள்,அவள் சொன்னது போலவே அந்த ஆபத்து நிகழும்.

ராமலிங்கம் அவளை ஆச்சரியமாக பார்த்தான். ராதாவா...இப்படி எப்படி இவளால் சரியாக சொல்ல முடிகிறது? என்று ஆச்சரியப்பட்டான்.

அன்று ராதாவின் உடலுக்குள் புகுந்திருந்த ராஜாராமன் ஆவி ராமலிங்கத்தை அழைத்தது.

"நீ சரியான முறையில் நடப்பதில்லை உன் மனைவிக்கு துரோகம் செய்கிறாய்.தீய வழியில் போகாதே " என்று கூறியது.

ராமலிங்கத்துக்கு கோபம் வந்தது.

"போடி பெருசா அருள்வாக்கு சொல்ல வந்துட்டா...உனக்கு பைத்தியம் தான் பிடிசிருக்கும்ன்னு நினைக்கிறேன்.பேசாம குடுக்கிறதை சாப்டுகிட்டு கிட" என்று திட்டி தீர்த்து விட்டு போனான்.

ருக்மணியிடம் போய் ராதாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூறினான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

"அந்த சனியனை சீக்கிரம் விட்டுத் தொலைங்க" என்றாள்.

ராமலிங்கத்தின் மனம் கேட்கவில்லை தொட்டு தாலி கட்டிய மனைவி ஆயிற்றே பொறுமையை கடைப்பிடித்தான்.

ராதாவை இயக்கிய ராஜாராமன் ஆவி இடையிடையே ராமலிங்கத்துக்கு சூசகமாக அறிவுரை வழங்கியது. ஆனால் ராமலிங்கம் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. ருக்மணியின் மீது இருந்த மோகம் அவன் கண்களை மறைத்தது.

ராஜாராமன் ஆவிக்கு கோபம் தாங்க முடியவில்லை. எவ்வளவு புத்தி சொல்லியும் ராமலிங்கம் மனசு மாறவில்லையே...அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தது.

ஒரு படுபயங்கரமான திட்டம் ராஜாராமன் ஆவி மனதில் உதித்தது.

மறுநாளே...அந்த அதிரடி திட்டத்தை நடத்திக்காட்டியது.

அதன்படி...ராதா தூக்கில் தொங்கினாள்.

IV

வீட்டுக்குள் நுழைந்த ராமலிங்கம் ராத பிணமாக தொங்குவதை பார்த்து அலறினான். "ஐயோ...ராதா...என்ன காரியம் செய்து விட்டாய்..." என்றபடி அங்கும் இங்கும் ஓடினான்.

அவன் உடம்பு முழுக்க வியர்வை ஆறாக ஓடியது. பதட்டத்துடன் என்ன செய்வது என்று புரியாமலேயே வீட்டை விட்டு வெளியே ஓடினான்.

அங்கே அவனுக்கு ஷாக் அடித்தது போலாகி விட்டது. எதிரே ராதா வந்துக்கொண்டிருந்தாள்.

கணவனை பார்த்ததும் சிரித்தாள். ராமலிங்கத்துக்கு தான் காண்பது கனவா அல்லது நனவா என்பது போல இருந்தது.

மீண்டும் வீட்டுக்கு ஓடிச்சென்று பார்த்தான்.அங்கு அவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்து இருந்தது.

தூக்கில் தொங்கிய ராதாவின் உடலை காணவில்லை.

வீட்டுக்குள் நுழைந்த ராதா, "என்னங்க, வெளிய வந்து பார்த்தீங்க. அப்புறம் வீட்டுக்குள்ள ஒடுநீங்க. திருதிருன்னு முழிசிகிட்டு நிக்குறீங்க. என்ன விஷயம்?" என்றாள்.

ராமலிங்கம் நடந்ததை கூறினான். ராதா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"ஏதோ தப்பு செய்யுறீங்க அதான் இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளருறீங்க. மனசை அலைபாய விடாதீங்க. எல்லாம் ஒழுங்கா இருக்கும்" என்றாள் ராதா.

ராமலிங்கத்துக்கு சுரீர் என்றது, ருக்மணியிடம் மயங்கி கிடப்பதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ என்று முதல் தடவையாக பயந்தான். ஆனால் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

அன்று மாலை அவன் ருக்மணியை சந்தித்தான். வீட்டில் நடந்ததை கூறினான்.

"இதெல்லாம் பிரமை...எல்லாருக்கும் வர்றது தான். கவலைபடாதீங்க..." அவனை இழுத்து அனைத்து நெற்றியில் முத்தத்தை பதித்தாள்.

ராமலிங்கத்துக்கு காலையில் ஏற்பட்ட பயமும் பதட்டமும் ருக்மணியின் அரவணைப்பில் பறந்து போனது.

ராஜாராமன் ஆவி இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தது. இவ்வளவு செய்தும் இவனுக்கு புத்தி வரவில்லையே? என்ன செய்ய...என்று யோசித்தது.

ராஜாராமன் ஆவியின் பார்வை ருக்மணி மேல் திரும்பியது.

"இவள் தான் அவனை கெடுக்கிறாள்...இவளை ஒழித்துக்கட்டி விட்டால்...எல்லாம் சரியாகிவிடும்" இப்படி நினைத்த படி அது அடுத்த திட்டத்தை தீட்ட தொடங்கியது.

கனவில் சென்று மிரட்டினால்...நிச்சயம் பயந்து விடுவாள். அதன் பிறகு ராமலிங்கத்தை விட்டு விடுவாள் என்று ஆவி நினைத்தது.

அன்றிரவு இந்த திட்டத்தை செயல் படுத்த அது முடிவு செய்தது.

நள்ளிரவு ஒரு மணி...

ருக்மணிக்கு அந்த கனவு வந்தது... கும்பலாக வந்த சிலர் அவளை நாடு ரோட்டில் போட்டு துண்டு துண்டாக வெட்டுவது போல இருந்தது. வேட்டியவர்களில் ஒருவன் "ஏண்டி... உனக்கு கள்ள புருஷன் கேட்குதோ...சாவுடி" என்றபடி தலையில் வெட்டினான்.

ஆ...என்று அலறியபடி படுக்கையில் இருந்து எழுந்தாள். பயத்தில் வியர்வை கொட்டியது. வியர்காலையில் கண்ட கனவு பலித்து விடும் என்பார்களே...

அவள் உடம்பு நடுங்கியது, எப்படியோ பயந்துக்கொண்டே தூங்கி போனாள்.

மறுநாள் கல்லூரியில் சந்தித்துக்கொண்டதும் கெட்ட கனவுகள் வருவதாக ராமலிங்கத்திடம் கூறினால். அவனும் தனக்கு பயங்கரமான சம்பவங்கள் ஏற்படுவதாக கூறினான்.இருவரும் சேர்ந்து ஒரு மந்திரவாதியிடம் சென்று குறி கேட்க தீர்மானித்தனர். சேலத்தில் ஒரு மந்திரவாதி இருப்பதாக கேள்விப் பட்டு அங்கு போனார்கள்.

விவரத்தை கேட்டதும் அவன் பூஜை போட்டான்.

சில நிமிடம் கழித்து "உங்க ரெண்டு போரையும் நிம்மதியா இருக்க விடாதது ராஜாராமன் ஆவி தான். அது உங்களை பழிவாங்க துடிக்குது " என்றான்.

அவன் சொன்னதை கேட்ட இருவரும் ஆடிப் போனார்கள். ஆவியை மரத்தில் ஆணி அடித்து கட்டி விட வேண்டியது தான் என்று திட்டம் போட்டனர்.

அதைப் பார்த்ததும் ராஜாராமன் ஆவிக்கு ஆத்திரம் அதிகமானது. இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தமே இல்லை என்பதை உணர்ந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான் என்று தனக்குள் கூறிக்கொண்டது.

ஒரு வாரம் கழிந்தது...

ராமலிங்கம்-ருக்மணி இருவரும் ராஜாராமன் ஆவியை எப்படி சரிக்கட்டுவது என்று பதட்டத்துடன் பேசினார்கள். என்னென்னவோ திட்டங்களை தீட்டினார்கள்.

இரவு 10 மணி வரை அவர்கள் பேச்சு முழுக்க ஆவியை பற்றி தான் இருந்தது.

அதே சமயம்...

ராதாவின் உடலில் ராஜாராமன் ஆவி மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டு இருந்தது...ராதா உடலில் ஜம்...மென்று உட்கார்ந்ததும் தனது இறுதி திட்டத்தை செயல் படுத்த தொடங்கியது.

ராதா தெருவில் இறங்கி நடந்தாள். ரெண்டு தெரு தாண்டி இருந்த ருக்மணியின் வீட்டுக்குள் நுழைந்தாள். திடீரென ராதா அங்கு வந்ததை எதிர்பார்க்காத ராமலிங்கமும் ருக்மணியும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ராதா அவர்களை கண்டபடி திட்டினால்." அடப்பாவி! இவளுடன் பழகாதே என்று எத்தனை தடவை சொன்னேன். கேட்டியா?" என்றபடி பார்க்கலை நர நரவென கடித்தாள்.

ராதா ஆண் குரலில் பேசிய விதம், கோபப்பட்ட முறை எல்லாவற்றையும் கவனித்த ருக்மணி, அவள் உடம்பில் வந்து இருப்பது தன் கணவன் தான் என்பதை புரிந்துக்கொண்டாள்.

பளீரென அவளுக்கு சேலம் மந்திரவாதி சொன்னது ஞாபகம் வந்தது.

ராஜாராமனுக்கு எதைக் கண்டால் பயமோ அதைச் செய்தால் போதும் ஆவி ஓடி விடும் என்று மந்திரவாதி கூறி இருந்தான்.

வாழ்ந்த காலத்தில் ராஜாராமனுக்கு தண்ணீர் என்றால் பயம்.மழை தண்ணியில் கூட காலை வைக்க பயப்படுவான்.

ஆவி ஆன பிறகும் இதே நிலை தான் நீடித்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த  ருக்மணி வீட்டை விட்டு வெளியே ஓடினாள். பக்கத்தில் இருந்த ஆற்றுக்குள் கழுத்தளவு தண்ணீரில் நின்றுக் கொண்டாள்.

அதோடு "இப்ப என்ன செய்வீங்க.... இப்ப என்ன செய்வீங்க...." என்று கிண்டல் செய்தாள். இதை ஆவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உடனே வேறு திட்டத்தை போட்ட ஆவி, ராதாவின் உடலில் இருந்து வெளியேறி அவளை வசியம் செய்ய தொடங்கியது.

"போ...போ...தண்ணிக்குள் நிற்கும் அவளை விடாதே...தண்ணீருக்குள் பிடித்து அமுக்கு...நீ அவளை உயிருடன் விட்டு விட்டால் உன் புருஷன் உனக்கு கிடைக்க மாட்டான். அவளுடன் ஓடி விடுவான். உன் புருஷன் உனக்கு வேண்டும் என்றால் தாமதிக்காதே...போ....போ...தண்ணீருக்குள் நிற்கும் அவளை கொல்...உனக்கு ஒன்றும் வராது...நான் பார்த்துக் கொள்கிறேன்...போ...போ... அவளை கொல்."

ராதாவின் உள்மனதில் இது மீண்டும் மீண்டும் எதிரொலிக்க தண்ணீருக்குள் பாய்ந்தாள்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ருக்மணி அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்கு முன்....ராதா அவள் தலை முடியை கொத்தாக பிடுத்துக் கொண்டாள்.

ருக்மணி துடிக்க துடிக்க அவளை தண்ணீருக்குள் வைத்து வெறி பிடித்தவள் போல அமுக்கினாள். ருக்மணி துடிக்க...துள்ளி திமிற ...ராதா அவளை விடாமல் பிடித்துக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் ருக்மணி பிணமாக மிதந்தாள். தண்ணீரில் இருந்து கரைக்கு வந்த ராதா "இனியாவது ஒழுங்காக வாழுங்கள்" என்று ராமலிங்கத்திடம் கூறியபடி மயங்கி விழுந்தாள்.

அவனுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் பார்த்த போது எல்லாமே புரிந்து விட்டது. ராஜாராமன் ஆவி விடாமல் விரட்டி ருக்மணியை கொன்று போட்டதே என்று பயப்பட்டான்.

அந்த அதிர்ச்சியில் அவன் வாய் இழுத்துக்கொண்டது. ஒழுங்காக பேச முடியாமல் திணறினான்.

செய்த தவறுகளுக்கு வருந்தியபடி ராதாவுடன் மெல்ல வீடு நோக்கி நடந்தான். அன்றிரவு ஓசையில்லாமல் நடந்து விட்ட ஒரு கொலையை நினைத்த அவனுக்கு தூக்கமே வரவில்லை.

மறுநாள்...

கணவன் செத்துவிட்ட ஏக்கத்தில் ருக்மணி ஆற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பேசிக்கொண்டார்கள்.

ஆனால் அவளை கொன்றது ஆவி தான் என்பது இருவருக்கு மட்டுமே தெரியும்...

-ஆவிகள் தொடரும்.

Credits: Rani Weekly Magazine. 

No comments: