Search This Blog

Thursday, June 28, 2012

கோடை நோய்களை விரட்டும் வழிகள்


கோடை நோய்களை விரட்டும் வழிகள்
தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே  தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் வெப்பத்தையே சமாளிக்க முடியவில்லை. இதில் கோடை கத்திரி வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-
 
கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும், மேலும் வியர்குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிர தையாக இருக்கவேண்டும் என்று சொல்லித்தர வேண்டியதில்லை.

அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே:
 
இளநீர்::
 
இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும்.
 
மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம். உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறு வதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து, நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராகப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது.
 
இதனால் கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேலை அயர்ச்சி போன்ற தொந்தரவுகள் தொலைந்து போகிறது. இளநீரை உடனடியாகக் குடித்து விடுவதுதான் நல்லது. வாங்கி இதனை பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல.
 
இளநீரின் மருத்துவக்குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதனை வாங்கிய அரைமணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இதில் எதனையும் கலந்து குடிக்கக்கூடாது.  இதய நோயாளி களுக்கு இளநீர் இதம்.
 
வெள்ளரிக்காய்::
 
வெள்ளரியில் நீர்ச்சத்துடன், மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக, வெள்ளரிப்பழத்தில் நிறைய `கார்போ ஹைட்ரேட்டுகளும்', `புரோட்டீனும்', கால்சியமும், தாது உப்புக்களும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட, வெள்ளரிப்பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனெனில், வெள்ளரிப்பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது.
 
வெள்ளரிப்பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளைக் கொடுத்து, வெப்பத் தாக்கலில் இருந்து வெளியேற உதவுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் மட்டும் வெள்ளரிப்பழம் மிகவும் இனிப்பாக இருந்தால், சாப்பிடுவதில் அக்கறை தேவை.
 
வெள்ளரியின் வெவ்வேறு வகைகள்::
 
இப்போது நாட்டு வெள்ளரி, சீமை வெள்ளரி என்று பிஞ்சிலும் சரி, பழத் திலும் சரி வெவ்வேறு வகைகள் வருகின்றன. எல்லா வகையும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவை தான். சத்துக்கள் இரண்டு வகைகளிலும் சரிசமம்தான். விருப்பப்படி சாப்பிடலாம்.
 
சாப்பிட வேண்டிய::
 
நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை முடிந்தளவு சேர்த்துக் கொள்ளலாம். கோடையில் சைவ உணவுகளே உகந்தது. அசைவ உணவாக இருப்பின் கடல் உணவுகள் விரைவில் செரித்து விடக்கூடிய தன்மை வாய்ந்தவை. குளிர்ச்சியான உணவுகளில் கீரைகளும், பழங்களும் முதல் இடத்தைப் பெறுகின்றன. ஆனால் பப்பாளி, சீத்தாப்பழம், எலுமிச்சை, தர்ப்பூசணி, அத்தி ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அதிகரிக்காது.
 
தவிர்க்க வேண்டியவை::
 
பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளை போன்ற கிழங்கு வகைகள், வாழைக்காய், மரவள்ளி, கேரட் மற்றும் கட்டாயம் மதுவகைகளைத் தவிர்த்தல் வேண்டும். இனிப்பான வெல்லம், சர்க்கரை, தேன், ஜாம், வெண்ணெய், நெய் வனஸ்பதி, கோலா, ஐஸ் கிரீம், குளிர்பானம், கேக் கொழுப்பு மிகுந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவை உகந்ததல்ல என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
 
தண்ணீர் அதிகம் குடியுங்கள்:::
 
தண்ணீரில் இருப்பவை:
 
கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு கள், தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை. நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத்தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான்.
 
கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்து விடுவார்கள். தண்ணீரைக் குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும்.
 
நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. தினசரி கோடையில் குறைந்தது 3-4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.
 
ஒரு நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும்.
 
இயற்கைப் பழச்சாறுகள்::
 
அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லாப்பழங்களையும் சாப்பிடலாம்.
 
கோடையில் குளியல்::
 
ஒரு நாளைக்கு காலை, மாலை அல்லது இரவு, வேலைக்கு தகுந்தாற்போல் குளிக்கலாம். வியர்வை நாற்றும் போகும். ஒரு நாளைக்கு மேல் ஒரு உடை யைப் பயன்படுத்தக்கூடாது. கோடையில் உடையால் தொற்றுகள் பரவும். சொறி, சிரங்கு, அம்மை, அக்கி போன்ற தொந்தரவுகள் வரும்.
 
தனித்தனி சோப்புகள், ஷாம்புகள், சீப்புகள், துண்டுகள், கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். தன் சுகாதாரம், பொது சுகாதாரம் பராமரிக்க வேண்டும். இதனால் நோய் வரும் முன்னர் காக்கவும், வந்த பின்னர் போக்கவும், பிறருக்குக் குறிப்பாகத் குழந்தைகளுக்குத் தொற்றாமலும் காக்கலாம் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணி காசலம்.
 
சேர்த்துக் கொள்ள வேண்டியவை:::
 
அகத்திக்கீரை, தண்டுக் கீரை, முருங்கை, மனத் தக்காளி, டர்னிப் நூற்கோல், முள்ளங்கி, நீர்ப்பூசணி, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, பீன்ஸ், கத்தரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங் காய், வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய், வெங்காயம் நிறைய சேர்க்கலாம். பருப்பு வகைகளில் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, வறுத்த கடலை, புழுங்கல் அரிசி, கோதுமை, ராகி ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
 
அறவே தவிர்க்க வேண்டியவை:::
 
கோடையில் அதிக எண்ணெய், காரம், மசாலா, அதிகம் வறுத்தது, உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வெந்த உணவுகள் உகந்தது. வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகாது.
 
கோடைக்கால உடைகள்:::
 
ஆள் பாதி, ஆடை பாதி என்பதுபோல, கோடையில் அரைக்கை, காட்டன் சட்டை போட்டுக் கொள்ளலாம். காட்டன் ஆடைகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தலாம். பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
 
கடும் கோடையில் வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் ஆடைகளே மற்ற எல்லாவற்றையும் விட, உகந்ததாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளி ஒவ்வாமை அதாவது அலர்ஜி உள்ளவர்கள் தேவைக்கேற்ப ஆடைகளைப் பயன்படுத்தலாம்.        

No comments: